காசே கடவுளாகிவிட்ட இன்றைய சூழலில், பணத்தின் அவசியம் குறித்து யாருக்கும் பாடம் எடுக்கவேண்டியதில்லை. அவரவரின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளே அதை வலிக்க வலிக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.பந்தம், பாசம், உறவுகள் அத்தனையையும் பின்னுக்கு தள்ளிவிட்டு பணம் உயரத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டது. எங்கேயும், யாராக இருந்தாலும்.. காசு இருந்தால் மட்டுமே காரியம் ஆகும் சூழ்நிலை! இதற்காக, பணத்தை சாபம் என்றோ, பணம் சம்பாதிப்பதை பாவம் என்றோ சொல்லித்திரிவது அர்த்தமற்ற போக்கு. பதிலாக, பணத்தை கைக்கொள்ளும் கலையை அத்தனை பேருமே கற்றுக் கொள்வதுதான் இதற்கான சரியான தீர்வு! பந்தம், பாசம், உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும் நல்ல மனிதர்கள் இன்றைய சூழலில் பொருளாதார விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்கவேண்டிய கட்டாயமே, இந்தப் புத்தகத்தை வடிவமைக்க வைத்தது என்றால், அது மிகையில்லை! ஆரோக்கியம் குறித்த விழிப்பு உணர்வு நூல்களை வெளியிட்டு வரும் மல்லிகை பிரசுரம், ‘காசு.. பணம்.. துட்டு!’ என்று உங்கள் பார்வையை திசை திருப்ப நினைப்பதன் பின்னணியும் இதுதான்!நிறைய சம்பாதிப்பவர்கள்தான் பெரும்பணக்காரர்களாக ஆக முடியும் என்பது மாயை. குறைந்த வருவாய் என்றாலும், பணத்தை மிகச் சரியாக கையாளுபவர்கள் மட்டுமே பணக்காரர்களாக இருக்க முடியும். படிக்காத ஒருவர் பணக்காரராக ஆவதும், நன்கு படித்தவர் ஹவுசிங் லோன் கட்டவே திணறுவதும்கூட இந்த ஒரு விஷயத்தால்தான்! பணத்தின் தன்மைகளை விவரித்து, அதைப் பெருக்கும் சூட்சுமங்களை.. நம் சிந்தனைப் போக்கில் செய்துகொள்ளவேண்டிய மாற்றங்களோடு.. மிகக்குறைந்த செலவில் கற்றுக் கொடுக்கும் இந்தப் புத்தகம், உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் பாதையில் தெளிவாக செலுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்.